கரோனா நிவாரண பொருள்கள், நிவாரண தொகை ஆகியவை நேற்று முதல் தமிழ்நாடு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சென்னை திருவல்லிக்கேணி ரேஷன் கடைகளை அமைச்சர் ஜெயகுமார் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரோனா வைரஸ் தாக்குதலில் மூன்றாம் கட்டத்துக்கு நாம் செல்லக்கூடாது என்பதால் அரசு சார்பில் சமூக இடைவெளி, கை கழுவதல் போன்ற பழக்கங்களை முன்னிறுத்தி வருகின்றோம். அத்தியாவசியத் தேவை தவிர எதற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் அவர்கள் சமூக குற்றவாளியாகவே பார்க்கப்படுவார்கள்.
வங்கியில் செலுத்த வேண்டிய மாத தவணை தொடர்பாக வங்கிகளின் கேள்விக்கு, மக்கள் விழிப்போடு இருந்து அரசு உத்தரவை எடுத்து வங்கிகளிடம் கூறுங்கள். அதேபோன்று புகாரும் தெரிவிக்கலாம். ஜிஎஸ்டி ரத்து பற்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அதை பற்றி நான் இப்போது தெரிவிக்க முடியாது. கரோனா வைரஸ் தாக்குதலால் பொருளாதார வீழ்ச்சி மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மீன்பிடி தடைக் காலத்தை குறைக்க வேண்டும் என்பது குறித்து, பிற கடலோர மாநிலங்களோடு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அனைத்துக்கட்சி கூட்டம் பற்றி முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் கருத்து சரியானது. ரத்தன் டாட்டா, அம்பானி போன்ற தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இங்கு மாறன் பிரதர்ஸ் இதை கவனித்து உதவ வேண்டும். கடலில் பெருங்காயம் கரைப்பது போல் இருக்கக் கூடாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவிட்19 வைரஸ் தொற்றுக்கு எதிர்கொள்ளும் அரசின் அவசரக்கால திட்டம் என்ன?