சென்னை: ராயபுரம் தொகுதிக்குட்பட்ட 53ஆவது வட்டம் போஜராஜன் நகர் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். நேற்று நள்ளிரவு முதல் பெய்துவரும் கன மழையினால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
இதனால், அப்பகுதி மக்கள் அவதியுறும் செய்தியறிந்து, ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர், டி. ஜெயக்குமார், பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். மேலும், தனது சொந்த செலவில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களையும் வழங்கினார்.
மழைநீர் செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், பேரிடர் காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனவும் பொதுமக்களிடம் அவர் தெரிவித்தார். பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிந்து தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நின்று நிவாரணப் பொருள்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: 'நிவாரணம் வழங்காவிட்டால் போராட்டம்' - விசைப்படகு உரிமையாளர் சங்கம்