சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த 3 நாள்களாக தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்றது. கடைசி நாளான இன்று பரிசு வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஜெயக்குமார், அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், "மாணவர்கள் தங்களது கஷ்டம், துன்பம் ஆகியவற்றை ஒதுக்கி பெரிய தொழில் முனைவோர், கண்டுபிடிப்பாளர் ஆக வர வேண்டும். அங்கீகாரம் என்பது உழைப்பால் மட்டுமே கிடைக்கும். என்னுடைய முயற்சியால்தான் பல்வேறு துறைகளில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது" என்றார். தொடர்ந்து கண்காட்சியில் மாணவர்களுக்கு சிறந்த தயாரிப்புக்கான பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு பல்கலைக்கழகமாக உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குழுக்கள் போடப்பட்டுள்ளது. அரசு கேட்கும் கேள்விகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் அடுத்த கூட்டம் நடைப்பெறும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று உறுதியாக உள்ளோம். பல்கலைக்கழகத்தில் பேசுவது எங்கள் பழக்கம் இல்லை. சட்டப்பேரவை அலுவலகத்தில் வண்ணாரப்பேட்டை போராட்ட குழுவினரை அழைத்து பேசியுள்ளேன். இது குறித்து முடிவு எடுக்கப்பட்ட பின் பல்கலைக்கழகத்திற்கு ஒரு சிறப்பு இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இன்பினிட்டி பார்க்' - மாற்றுத்திறனாளி சிறுவர்களின் உலகம்!