சென்னை பட்டினம்பாக்கம் இல்லத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பேரறிஞர் அண்ணா வகுத்து தந்த இரு மொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம்.
பிற மாநிலங்களிலும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நேற்றைய தினம் முதலமைச்சர் டிவிட்டர் பதிவு செய்திருந்தார், ஆனால் அதனை அரசியலாக்கி இருக்கின்றனர்.
கர்நாடகா, ஆந்திரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்ததன் அடிப்படையில்தான் முதலமைச்சர் டிவிட்டர் மூலம் பிரதமருக்கு கோரிக்கைவைத்தார்.
ஆனால் அதனை தவறாக புரிந்துகொண்டவர்கள் அதனை அரசியலாக்கியதால் அந்த டிவிட்டர் பதிவு நீக்கப்பட்டது. எந்த நிலையிலும் இந்தியை ஏற்கமாட்டோம்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் இரு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது வருத்தமளிக்கிறது. நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. அதற்காக சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தத்தை கொடுத்துவருகிறோம்" என தெரிவித்தார்.