சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற CSI பெண்கள் பேரவை மாநாட்டில்
சமூக நல மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, "CSI பேரவை பல்வேறு சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆதரவற்றோர் இல்லம், திருமணப்பதிவு மையம் உள்ளிட்டப்பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். மேலும் பெண்கள் விடுதியில் சமூக நலத்துறை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
குறிப்பாக தரமணி, தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் தனியார் பெண்கள் விடுதியில் உணவு மற்றும் பாதுகாப்பு முறையாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய அறிவுறுத்த இருக்கிறோம்.
தேசியக்கொடி பொருத்தப்பட்டிருக்கும் வாகனத்தின் மீது செருப்பு தூக்கி வீசியதில் இருந்தே தெரிகிறது, அவர்களுக்கு எவ்வளவு தேசபக்தி இருக்கிறது என்று.
படித்தவர்கள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறையும் இணைந்து பள்ளிகளுக்குச்சென்று மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்க இருக்கிறோம். மதிப்பெண்களை வைத்து குழந்தைகள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

மாணவர்களுக்கு ஆலோசனை என்பது மனநல மருத்துவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் வழங்கலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிண்ட்ரெல்லாவின் செருப்பு பத்திரமாக இருக்கு என பிடிஆர் பழனிவேல் திராகராஜன் ட்வீட்