சென்னை: தலைமைச் செயலகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்களை இன்று (அக்.18) சந்தித்தார்
இதில், பொதுப்பணித்துறையின் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் ஆகியவற்றினை செயல்படுத்திய விவரம், நிலுவையிலுள்ள திட்டங்களை விரைவுப்படுத்த வேண்டிய நடவடிக்கை ஆகியவை தொடர்பாக அமைச்சர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, இந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களில் ஆணை பிறப்பிக்கப்பட்டவை, ஆணை பிறப்பிக்கப்பட வேண்டிய திட்டங்கள், செயல்படுத்த வேண்டிய விதம் ஆகியவை குறித்து அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
மேலும், பொதுப்பணித்துறை சார்ந்த திட்டங்களுக்கு உடனடியாக ஆணை பிறப்பித்து, பொதுமக்கள் பயன்படுத்தத்தக்க வகையில் அவற்றை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மதுரையில் கட்டப்பட்டு வரும் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி நினைவு நூலகம், அவரது நினைவிடம் ஆகியவற்றின் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதில் எந்த காலதாமதமும் இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வீரப்பன்.. விஜய குமார்.. பட்டுக்கூடு.. நடந்தது என்ன?