சென்னை: நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இன்னொரு 15 நாட்களுக்கு 5000 கன அடி நீரை விட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும். ஒருவேளை கர்நாடக அழசு தமிழகத்திற்கு தேவையான நீரை வழங்கவில்லை என்றால் நமக்கு வேறு வழியில்லை. பின்னர் தமிழகத்திற்கு இருக்கும் ஒரே தீர்வு உச்சநீதிமன்றத்தை நாடுவது தான்" என்று கூறினார்.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுமா என்ற கேள்விக்கு, 21ஆம் தேதி நடைபெரும் வழக்கில் என்ன நிலைமை ஏற்படுகிறது என்பதை பார்த்து தான் முடிவு எடுக்கப்படும் என்றும், தேவைபட்டால் தமிழக விவசாயிகளின் நலனை காக்க கன்டிப்பாக அனைத்து கூட்டம் கூட்டுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "காவிரி விவகாரத்தில் எப்போது இப்பிரச்சினை ஆரம்பித்ததோ, அப்போது இருந்தே பிரச்சனை தான். சுமுகமான ஒரு முடிவு தற்போது வரை எட்டபடவில்லை. நடுவன் மன்றத்தில் நாடி பின்னர் உச்ச நீதிமன்றத்தை நாடினோம், கெசட்டில் கொண்டு வந்தோம். காவிரி விவகாரத்தை பொருத்தமட்டில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை தான் நாட வேண்டியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுத்து நிச்சயம் நிவாரணம் வாங்கி தருவோம் என்றும், பேச்சுவார்த்தைக்கு சென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் வலுவிழக்கும் எனவும் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மேகலும், மேற்தொடர்ச்சி மலைபகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளில் நீர் இருப்பு குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்யப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, "ஆய்வு செய்தால் நல்லது தான், அப்படி ஆய்வு செய்தால் நீர் இருப்பு குறித்து அனைவருக்கும் தெரியவரும்" என்று பதிலளித்தார்.
தொடர்ந்து "இந்தியா" கூட்டணி உள்ள காங்கிரஸ் கட்சியுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்னை முடிவுக்கு வருமா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, பேச்சுவார்த்தை சரி இல்லை என்றுதான் நாம் நீதிமன்றத்தை நாடுகிறோம், மறுபடியும் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றால் நமது சட்ட ஆயுதத்தை விட்டுவிடுவதாகிவிடும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பா? - பெங்களூருவில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!