சட்டப்பேரவை மானியக் கோரிக்கைகளின் முதல் நாளான இன்று (ஆகஸ்ட் 23) நீர்வளத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், வாக்கெடுப்பு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் பேரவையில் அரை நூற்றாண்டை நிறைவுசெய்யும் துரைமுருகனைப் பாராட்டி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் மீது தலைவர்கள் பாராட்டிப் பேசினர்.
இதையடுத்து, பேசிய அமைச்சர் துரைமுருகன் கண்கலங்கினார். அப்போது, "சொற்களும் வரவில்லை, என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. எனது வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிபெற்று இருந்தாலும் முத்தாய்ப்பாக அவையில் தீர்மானம் கொண்டுவந்தது நெஞ்சம் நெகிழ்ந்தது.
சாதியைக் கேட்டார் கருணாநிதி
ஸ்டாலின் கொஞ்சம் அழுத்தமானவர் என்று கருணாநிதி சொல்வார், அவர் என்னிடம் காட்டிய பாசத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போயுள்ளேன். கல்லூரியில் முரசொலி செல்வம் என் நண்பனாக இருந்தார், மாணவனாக இருந்தபோதே என்னை நண்பனாக நடத்தியவர் கருணாநிதி. அவர் ஒருமுறைகூட என்னிடம் சாதியைப் பற்றி கேட்கவில்லை.
என் தலைவர் அவர்தான்; என் வழிகாட்டி அவர்; எனக்கு எல்லாமுமாக இருந்தவர். அவரது மறைவிற்குப் பின் வெற்றிடம் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஸ்டாலின் அந்த வெற்றிடத்தை நீக்கிவிட்டார், தந்தையின் பாசத்தை மிஞ்சும் அளவிற்கு என் மீது பாசத்தைக் காட்டுகிறார் ஸ்டாலின். எனது வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டிருப்பேன்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: பேரவையின் பொன்விழா நாயகன் துரைமுருகன்