சென்னை: அத்திக்கடவு அவிநாசி திட்டம் என்பது 60 ஆண்டு கால விவசாயிகளின் கனவு திட்டமாக உள்ளதாகவும், 99% பணி நிறைவடைந்தது என அரசு தெரிவித்து வரும் நிலையில், எப்பொழுது இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றி பயன்பாட்டிற்கு வரும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.
பதில்: இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அத்திக்கடவு அவிநாசி திட்டம் முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும், இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கு காலிங்கராயன் அணையில் இருந்து 1.5 டிஎம்சி தண்ணீர் சம்ப் செய்து கொண்டு செல்ல வேண்டும் என்று , ஆனால் தற்போது காளிங்கராயன் அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் போதுமான தண்ணீர் வந்தவுடன் முதலமைச்சர் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கி வைப்பார் எனவும் கூறினார்.
கேள்வி: சத்தியமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராஜன் நகர், இக்கரை நெகமம், புதுப்பீர்கடவு உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தவும், அதேபோல் பெரும்பாலான இடங்களில் குடிநீர் தேவை அதிகமாக இருப்பதால் புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த அரசு முன்வருமா என பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி கேள்வி எழுப்பினார்.
பதில்: இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 400 கோடி ரூபாய்க்கு மேலாக கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பணி நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், 894 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு 43 கூட்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக கூறிய அவர், 123 இடங்களில் புதிதாக கூட்டு குடிநீர் திட்டங்கள் தொடங்கப்பட்டு அந்தப் பணிகளும் நடைப்பெற்று வருவதாகவும் கூறினார்.
103 இடங்களில் 21 ஆயிரத்து 729 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், குடிநீர் தேவைகள் அதிகமாக உள்ளன என பல்வேறு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள் என்றும், குடிநீர் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர் அதிகமான நிதியை இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறினார்.
கேள்வி: கலசப்பாக்கம் தொகுதி, கலசப்பாக்கம் ஒன்றியம், மிருகண்டா நதி அணையை புனரமைக்க அரசு முன்வருமா எனவும், 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதலமடைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு அந்த பணிகள் தொடங்கப்படுமா எனவும் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கேள்வி எழுப்பினார்.
பதில்: இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மிருகண்டா நதியை சீரமைக்க உலக வங்கியின் நிதி உதவியுடன் பணிகள் மேற்கொள்ள மத்திய நீர்வளத் துறையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், Dam safety review மூலமும் அணையை பாதுகாக்க செய்ய வேண்டிய வழியையும் ஆய்வறிக்கையாக கொடுத்துள்ளோம் என்றும், அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.
கேள்வி: பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, செம்மரம்பாக்கம் ஏரியில் நீர் உயர்த்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என கேள்வி எழுப்பினார்.
பதில்: இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 240 எம்.எல்.டி தண்ணீர் உள்ளதாகவும், 7 ஆண்டு காலமாக இதை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், தேசிய நெடுஞ்சாலையிடம் அனுமதி வழங்கப்பட்டு தற்போது அந்த குழாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் செம்பரம்பாக்கம் ஏரியில் 540 எம்.எல்.டி நீரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கேள்வி: சென்னை ஓ.எம்.ஆர் பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் சாலைகள் வெட்டப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் விரைந்து பணிகள் முடிக்க வேண்டும் என கூறி அவ்வப்போது நேரடி ஆய்வுகளையும் மேற்கொண்டு வருவதாக கூறினார்.
மேலும், ஓ.எம்.ஆர் பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சில இடங்களில் சாலைகள் வெட்டப்பட்டுள்ளதாக கூறிய அவர், சாலைகள் முழுவதுமாக சீர் செய்யும் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.