சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் சென்னை ஐஐடி இணைந்து தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான மின்னணுவியல் பயிற்சி முகாமை நடத்துகிறது. இந்த முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று (ஜனவரி 5) தொடங்கி வைத்தார்.
அதோடு மாணவர்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆரோக்கியம் என்னும் குறுந்தகட்டையும் அமைச்சர் வெளியிட்டார். அதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “எலக்ட்ரானிக்ஸ் தொழில் நுட்பம் என்னும்போது எலக்ட்ரானிக் ஸ்கூட்டர், பேட்டரி கார் என்று கூறுகிறோம். தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டேதான் செல்கிறது.
முன்பு இளம் கண்டுபிடிப்புகளுக்கு டெல்லியில் சென்றுதான் காப்புரிமை பெற வேண்டிய நிலை இருந்தது. தற்போது சென்னையிலேயே காப்புரிமை பெற முடியும். அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மின்னணுவியல் பயிற்சியை அளிக்க அரசு 25 லட்சம் ரூபாய் செலவிடுகிறது.
ஆசிரியர்கள் நன்றாக கற்றுக் கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மாணவர்கள் நன்றாக படிப்பதற்கு உடல் நலன் நன்றாக இருக்க வேண்டும். அறிவியல் சமுதாயத்தை உருவாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பாடத்திட்டத்திற்கு ஏற்ப தொழில்துறை வளர வேண்டும்.
தொழில் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்” என தெரிவித்தார். இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: மதவாதத்துக்குத்தான் எதிரிகளே தவிர, மதத்திற்கு அல்ல - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு