சென்னை: கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்ட மாதிரி வினாக்கள் தொகுப்பு மற்றும் கணிதத் தீர்வு புத்தகம் ஆகியவற்றை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களுக்கு வழங்கினார்.
மேலும், அரசுத் தேர்வு துறையின் மூலம் மாணவர்கள் தங்களின் சான்றிதழ் நகல்களைப் பெறுவதற்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்த பின்னர், அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பள்ளிக்கல்வித் துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினா வங்கி தொகுப்பு மற்றும் தீர்வு புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
இந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுதுவதற்கு உதவியாக இருக்கும். மேலும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும். கரோனா தொற்று வருவதற்கு முன்னர் தீர்வு புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போதுதான் அச்சிட்டு மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
200 ஆண்டுகள் கழித்து வரலாறு காணாத வகையில் தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மழை பெய்தபோது, பிற மாவட்டங்களில் இருந்து புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கு அளித்தோம்.
மாணவர்கள் புத்தகங்களை இழந்ததால், அவர்களுக்கு அரையாண்டுத் தேர்வினை மாற்றி வைத்து நடத்தினோம். ஆனால் தற்பொழுது தென் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளதால், அந்த மாவட்டங்களுக்கு மட்டும் மாணவர்களுக்கு வேறு தேதியில் அரையாண்டுத் தேர்வு நடத்துவதற்கு அறிவுறுத்தி உள்ளோம்.
கனமழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான பாட புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன. மேலும், பொதுத் தேர்வு தேதியில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மாணவர்களுக்கு தேர்வுக்குரிய பாடத்திட்டங்களை முடிக்க வேண்டி உள்ளதால், சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்துவதற்கும், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவும் பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “இன்றைய மாணவர்கள் மதிப்பெண்களுக்காக மட்டும் படிக்கிறார்கள்” இறையன்பு ஐஏஎஸ்!