சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மீதும் கவனம் செலுத்த தொடங்கியது. கடந்த 2021, மே மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் செயல்பாடுகளை தீவிரமாக கவனிக்க தொடங்கினார்.
கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த விருதுகளை சுதந்திர தின விழாவிலே இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
எப்போதும் சாரண சாரணியர் இயக்கம் என்பது பள்ளிக் கல்வித்துறையின் கீழேதான் செயல்படும். அதன் தலைவராக மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியின் போது நடத்தப்பட்ட தேர்தலில், மாநிலத் தலைவர் பதவிக்கு எச்.ராஜா மற்றும் முனனாள் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மணி போட்டியிட்டனர். அதில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மணி வெற்றிப்பெற்றார். இதனை அடுத்து அவரின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, தேர்தல் நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தலைவர், துணைத்தலைவர், மாநில ஆணையர் ஆகியப் பதவிக்களுக்கு ஆகஸ்ட் 17ந் தேதி முதல் 22ந் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதி வேட்பாளர் பட்டியல் 26ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது.
இந்த தேர்தலில் மாநிலத் தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாததால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கூறும்போது, முதலில் என்மீது நம்பிக்கை வைத்து யாரும் என்னை எதிர்த்து போட்டியிடவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் எனது நன்றிகள். அவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் கோரிக்கைகள் வைத்துள்ளார்கள். அவர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்பட்டு, பெரும்பாலான பள்ளிகளில் சாரண சாரணியர் இயக்கம் தொடங்கப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையின் ஆணையர் நந்தகுமார் பாரத சாரணர் சாரணியர் இயக்கத்தின் மாநில ஆணையராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் துணைத்தலைவர்களாக பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் கண்ணப்பன், பெரியண்ணன், விவேகானந்தன், மகேந்திரன், எத்திராஜூலு, நாராயணசாமி, லட்சுமி, சுகன்யா, அமுதவள்ளி, கஸ்தூரி சுதாகர், பாக்கியலட்சுமி தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மதுரை சிறையில் பரபரப்பு... கச்சநத்த வழக்கு ஆயுள் தண்டனைக்கைதி தற்கொலை முயற்சி