சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கான கூட்டம் மற்றும் ஆயுதக் கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. மேலும், தமிழ்நாட்டில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகள் வேலை நாட்களுக்கான ஆண்டு நாட்காட்டியை அமைச்சர் வெளியிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 5 ஆம் தேதி தொடங்கும் எனவும் கூறினார்.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி துவங்கும். 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் மார்ச் 19 ஆம் தேதி முதல் தொடங்கும். 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என்றார்.
மேலும், ஜூன் 9 ஆம் தேதி பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளது. அதேபோல் கல்வி சார்ந்த உபகரணங்களும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முன்கூட்டியே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தற்போது பள்ளிகள் திறக்கும் தேதி வெயிலின் தன்மையை குறித்து முதலமைச்சருடன் ஆராய்ந்து தள்ளி வைப்பது குறித்து பின்னர் தேவைப்பட்டால் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தான் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் இது தேர்வு நேரம் என்பதால், மாணவர்களை அறிவு சார்ந்த கல்வி நிலைய நூலகங்களுக்கு அனுப்ப வேண்டும். அருகில் உள்ள நூலகங்களுக்கு மாணவர்களை அனுப்பி அவர்கள் அங்கு படிக்கத் தொடங்கினால், பின்னர் வேறு நூலகம் சென்று படிக்கும் ஆர்வத்தை வளர்த்து கொள்வார்கள். பொதுத்தேர்வு முடிவுகள் வரும் பொழுது மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகள் எப்படி வந்தாலும் தைரியமாக எதிர்க்கொள்ள வேண்டும். மாணவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று கூறினார்.
மேலும், "மத்திய தணிக்கை துறை அறிக்கையில், கடந்த ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். குறிப்பாக பள்ளிகள் தரும் உயர்த்தப்பட்டதில் விதிவிலக்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகளை தரமாக இருக்கும் போது, எந்த பள்ளிக்கு தேவை என்பதை கண்டறிந்து தரம் உயர்த்த வேண்டும். அதில் எந்தவித தலையிடும் அழுத்தமும் இருக்கக் கூடாது. ஆசிரியர்கள் நியமனத்திலும் கூறப்பட்டுள்ள குறைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்வதற்கான அறிவிப்புகள் குறித்து அதன் தலைவருடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும்" என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.