சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நெல்லை மாவட்டத்தில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆறுதல் கூறினாலும் இழப்பு என்பது இழப்பு தான் என்று தெரிவித்தார்.
மேலும், 3-4 மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் போது பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகக் கூறிய அவர், நெல்லை சிஎஸ்ஐ பள்ளியில் அடித்தளம் இல்லாமல் பள்ளிக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
முதலமைச்சருடன் ஆலோசனை
அதனை தொடர்ந்து பேசிய அவர், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து இம்மாத இறுதியில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இடம் இல்லாத பட்சத்தில் வாடகைக்கு இடம் தேர்வு செய்ய வலியுறுத்திப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், ஜனவரி 3 ஆம் தேதி முதல் சுழற்சி முறையின்றி பள்ளிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஒமைக்ரான் தொற்று பாதிப்பின் நிலை குறித்து வரும் வாரங்களில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.
உதயநிதி அரசியலுக்கு வர வேண்டும் என சட்டப்பேரவையில் கூறியது நான் தான். அவரின் ஆர்வம், மக்கள் பணி பார்த்து ஆசையை வெளிப்படுத்தியதாகவும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரசிகரின் மகளுக்கு ஆறுதல் கூறிய ரஜினி; காணொலி வைரல்!