சென்னை: கோவையைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னனூர், காரமடை மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் இயங்கி வரும் 300-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளில், 80 சதவீத குவாரிகள் உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகப் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த கல் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கற்கள், ஜல்லிகள், எம்.சாண்ட் போன்றவை சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்தப்படுவதாகவும், அதற்கு அதிகாரிகள் உடந்தையாக செயல்படுவதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இரண்டு யூனிட் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 யூனிட் வரை கற்கள், ஜல்லிகள் கொண்டு செல்லப்படுவதாகவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த கடத்தல் நடந்து வருவதாகவும், அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளுக்கு எதிராகவும், கேரளாவுக்கு அதை கடத்துவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், குவாரிகள் அனுமதியின்றி செயல்படுவதோடு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் கல், ஜல்லிகள் எடுத்து செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
குவாரிகள் அனுமதியின்றி செயல்படுவதாக கூறுவது உண்மையா? என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அரசு தரப்பு, அனுமதியின்றி குவாரிகள் செயல்படுவது உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மனு குறித்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: மணல் குவாரிகளால் காத்திருக்கும் பேரழிவு குறித்து சிறப்பு அலசல்!