சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் உடன், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரிக்கை குறித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், நாளை முதல் பால் கொள்முதல் கிராமங்களில் படிப்படியாக குறையும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
அப்போது பேசிய ராஜேந்திரன், ''நாள் ஒன்றுக்கு 27.50 லட்சம் லிட்டர் பால் கிராமப்புறங்களில் இருந்து ஆவின் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறோம். இதில் 25 லட்சம் லிட்டர் பால் ஆவின் நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள பால் ஆனது ஆவின் இனிப்பு உள்ளிட்ட பொருள்களை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
நாளை முதல் கிராமங்களில் பால் கொள்முதல் நிறுத்தப்படும். நாளொன்றுக்கு கிராமங்களில் 27.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறோம். பால் கொள்முதல் நாளொன்றுக்கு 50,000 முதல் ஒரு லட்சம் லிட்டர் வரை படிப்படியாக குறைக்கப்படும். தொடர்ந்து ஐந்து நாட்களில் 10 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் தமிழ்நாடு அரசுக்கு குறையும். மீதம் உள்ள பால்களை தேவைப்படுவோருக்கு விற்று விடுவோம்.
அரசு பால் லிட்டர் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. அதே நேரத்தில் தனியார் நிறுவனம் 45 முதல் 47 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. இதனால் எங்களுக்கு லாபம் ஏற்படுவதால் கூடுதல் விலை கொடுத்து வாங்க தயாராக உள்ள தனியார் நிறுவனத்திற்கு பாலை வழங்க உள்ளோம்.
தமிழ்நாடு அரசு பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு 33.75 ரூபாய் கொடுத்து மட்டுமே கொள்முதல் செய்கிறது. அதே போல் எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு 44 ரூபாயினை மட்டுமே வழங்குகிறது. பசும்பால் மற்றும் எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் உயர்த்தி இன்று பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் உடன் ஈடுபட்ட பேச்சுவார்த்தையில் கோரிக்கை வைத்தோம். ஆனால் உடன்பாடு எட்டவில்லை'' எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், ’'பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை மிக குறைவாக உள்ளது. எனவே அதனை உயர்த்தி தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அண்டை மாநிலமான கேரளாவில் பசும்பால் ஒரு லிட்டருக்கு 48 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
நாளை காலை நடைபெற உள்ள பால் நிறுத்தப் போராட்டத்தில் 9500 சங்கங்களில் 3000 சங்கங்கள் மூலம் 25 சதவீதம் பேர் கருப்புக் கொடியுடன் பங்கேற்க உள்ளனர். இதனால் கட்டாயம் பால் கொள்முதல் நிறுத்தப்படும். அரசு எங்களை அழைத்து பேசி முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், தனியாருக்கு நிகரான கொள்முதல் விலையை வழங்கினால் மட்டுமே எங்களுடைய வாழ்வாதாரம் உயரும்’’ என தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலை விநியோகம் செய்து வருகிறது. தினசரியாக 38 லட்சம் லிட்டர் அளவில் பால் கொள்முதலை ஆவின் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களின் இந்தப் போராட்ட அறிவிப்பால், படிப்படியாக ஆவின் பாலின் கொள்முதல் குறைக்கப்படும் காரணத்தால், ஆவின் பால் விநியோகம் தடைபடும். மேலும் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டால் ஆவின் பாலின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: SMS மூலம் இந்தியா முழுவதும் சைபர் மோசடி செய்த கும்பல் கூண்டோடு கைது - அழைத்து பாராட்டிய டிஜிபி!