சென்னை: சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் மோசடிகள் மற்றும் இழப்புகள் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய தமிழ்நாடு பால்முகர்கள் தொழிலாளர் நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.அ பொன்னுசாமி கூறியதாவது,
"திமுக அரசு, ஆவின் நிறுவனத்தை அழிக்கும் செயல்பாட்டை முன்னெடுக்கிறது. கடந்த மே மாதம் 2021ஆம் ஆண்டில் இருந்து செப்டம்பர் 2022ஆண்டுக்குள் கையிருப்பில் இருந்த 22,410 டன் பால் பவுடரையும், வெண்ணெய்யையும் குறைந்த விலைக்கு அவரச அவரசமாக விற்பனை செய்து முடித்து விட்டனர்.
பிறகு ஆகஸ்ட், 2022ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட SONAI என்ற கூட்டுறவு நிறுவனத்திடம் பால் பவுடர் வாங்குவதற்காக கை இருப்பில் இருந்த பால் பவுடரை 220 ரூபாய்க்கு விற்றுவிட்டு, 327 ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளனர். இதனால் 500 கோடி ரூபாய் வரை இவ்விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது.
மேலும், தரம் குறைந்த வெண்ணெய்யை கொள்முதல் செய்து தரம் குறைந்த பால் பவுடரை, அதில் கலந்து தரமற்ற பாலை விற்பனை செய்கின்றனர். எனவே, பாலின் தரத்தை உணவு பாதுகாப்புத்துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மறைமுகமான கலப்படம் ஆவின் பாலில் உள்ளது. இதனால் கடுமையான உடல் உபாதைகள் மக்களுக்கு ஏற்படும்.
29 லட்சம் லிட்டர் பால் தினசரி விற்பனை ஆகும் நிலையில் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால் 18 லட்சம் லிட்டர் தான் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதம் 11 லட்சம் லிட்டர் பால் விற்பனையை ஈடுகட்ட ஆவின் முழுக்க முழுக்க 70% பால் பவுடரையும் 30% வெண்ணெய் கலந்தும் தரமற்ற பாலை விற்பனை செய்கிறது.
இது மட்டுமின்றி ஆவின் பால் தட்டுப்பாட்டைக் குறைக்க பால் பவுடர் மற்றும் வெண்ணெய் கலந்து தரமற்ற பாலை உருவாக்குவதற்கு ஒரு லிட்டருக்கு 52 ரூபாய் வரை செலவாகுவதாகவும் பால் முகவர்களிடம் நேரடியாக ஒரு லிட்டருக்கு 42 ரூபாய் கொள்முதல் செய்ய வேண்டும்" எனவும் கோரிக்கை வைத்தார்.