சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதை தடுக்கும் பொருட்டு வாகன தயாரிப்பாளர்களோ அல்லது விற்பனையாளர்களோ புதிதாக இருசக்கர வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய தரச்சான்று உள்ள இரண்டு தலைக்கவசம் இலவசமாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணை குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, 'தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வரவேற்பதோடு, தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆனால் இந்தத் திட்டத்தினால் பெரிய அளவில் நன்மைகள் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிப்போர் மட்டுமின்றி மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போரும் அதிக அளவில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
அவ்வாறு பெரும்பாலான சாலை விபத்துகள் நடைபெற கவனக்குறைவை விட மது குடித்து விட்டு வாகனங்களை இயக்குவதுதான் காரணம் என்பதை பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இளம் தலைமுறை சீரழிந்து போவதற்கும் காரணமான மதுவை முற்றிலுமாக தடைசெய்வதற்கான தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாமல் சாலை விபத்துகளில் உயிரிழப்பதை தடுக்க இலவச தலைக்கவசம் வழங்கிட அரசாணை பிறப்பிப்பது என்பது வெறும் கண்துடைப்பு நாடகமே.
தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற துளி கூட முயற்சி எடுக்காமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்.
எனவே புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு இரண்டு தலைக்கவசம் இலவசமாக வழங்கும் அரசாணையை விட தமிழ்நாடு முழுவதும் பூரண மது விலக்கை அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்' என அதில் தெரிவித்திருந்தனர்.