கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு செய்தி வந்ததால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு நடத்தும், லாரி போன்ற வாகனங்களிலும் செல்ல தொடங்கினர்.
சென்னையை அடுத்துள்ள சோழவரம் பகுதியில் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வெளிமாநில தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் அரசு அனுமதி ஏதுமின்றி ஒரு லாரியில் ஏறி மறைந்துகொண்டு தப்பித்துச் செல்ல முயன்றனர்.
வட மாநில தொழிலாளர்கள் லாரியில் ஏறி செல்வது குறித்து தகவலறிந்த வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து வந்து சோழவரம் சாவடி அருகில் லாரியை மடக்கிப் பிடித்தனர். மேலும் அரசு அனுமதியின்றி வட மாநில தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல முயன்ற லாரியையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், லாரியில் இருந்து வடமாநில தொழிலாளர்களை மீட்டு அவர்களை சமாதானப்படுத்தி அரசு அனுமதியுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி அவர்களை மாநகராட்சி சார்பில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை சதிகளும் செய்து தரப்பட்டு வருகிறது.
முன்னதாக, குடிபெயர்ந்த தொழிலாளர்களை நல்ல இடங்களில் தங்கவைத்து, அவரவர் சொந்த மாநிலங்களுக்கு தொடர்பு ஏற்படுத்தி பாதுகாப்பாக அனுப்பிவைக்க வேண்டும் என மாநகராட்சிக்கு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க : தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வரும் மாணவர்களுக்கு சிறப்பு மையம்?