சமூக நல ஆணையர் ஆபிரகாம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "அனுமதிக்கப்பட்டுள்ள சமையலர் பணியிடங்களுக்கு சமையல் உதவியாளர்களைப் பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும். அதன் பின்னர் மீதமுள்ள சமையலர் பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு அரசு நிர்ணயித்துள்ள கல்வித் தகுதியின் அடிப்படையில் சமையல் உதவியாளர் பணியில் சீனியர்களுக்கான முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் சமையலர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், சத்துணவு மையங்களில் அமைப்பாளர், சமையலர் காலி பணியிடங்கள் அதிகளவில் இருந்துவருகிறது. அந்தக் காலிப்பணியிடங்களில் தகுதிவாய்ந்த சமையலர், சமையல் உதவியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 25 விழுக்காடு அமைப்பாளர் காலிப் பணியிடங்களில் அரசாணையில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். அதேபோல் சமையல் உதவியாளர்களுக்கு சமையலர் பதவி உயர்வு வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
இந்தப் பணிகள் டிசம்பர் 5ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர் பதவி உயர்வு பெற தகுதிபெற்றுள்ள அனைத்து நபர்களது கல்வித் தகுதியினை அரசு தேர்வுத் துறையின் உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்னர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சமையலர் பதவிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாமல் இருந்தால் தகுதிபெற்றவர்கள் என இவர்களுக்கான நியமனக் கல்வித்தகுதி அரசாணையில் கூறப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.