சென்னை: கடந்த நவம்பர் மாதம் இறுதியில் தெற்கு அந்தமான் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல மெல்ல வலுப்பெற்று, நேற்று முன்தினம் (டிச.1) காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் மற்றும் நேற்று (டிச.2) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த நிலையில் இன்று காலை 5.30 மணியளவில், அந்த கற்றழுத்தத் தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்க கடலில் 300 கிலோ மீட்டர் புதுச்சேரிக்கு தென்கிழக்கவும், சென்னைக்கு தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும், இதைத் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று டிசம்பர் 4ஆம் தேதி காலைக்குள் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு, தெற்கு ஆந்திரப் கடற்கரைக்கு நகர்ந்து, நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை டிசம்பர் 5ஆம் தேதி முன் பகலில் ஒரு புயலாகக் கரையை கடக்கும். அப்போது அதிகபட்சமாக மணிக்கு 80 - 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே 5ஆம் தேதி மாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் அந்த பகுதிகளில் சுமார் 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் (டிச.3 மற்றும் டிச.4) அனேக இடங்களிலும், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல்: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. அதற்கு 'மிக்ஜாம்' என பெயரிடப்பட்டுள்ளது. ("மைச்சாங்" - மிக்ஜாம் என உச்சரிக்கப்படுகிறது). இந்த புயலானது சென்னைக்கு அருகில் இருப்பதால், டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் கன மற்றும் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக தெற்கு ரயில்வே சார்பில் சென்னையில் இருந்து விஜயவாடா கல்கட்டா மற்றும் டெல்லி செல்லும் 118 ரயில்கள் பகுதி ரத்தும், சில ரயில்கள் முழுமையாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமாநிலையத்தில் பயணிகள் வருகை குறைவாக இருந்ததால் நேற்று ஒரே நாளில், 3 புறப்பாடு விமானங்கள் மற்றும் 4 வருகை விமானங்கள் என மொத்தம் 7 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் பல விமான சேவை தாமதமாக இயக்கப்பட்டது.
சென்னையில் கன மழை: வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றது, தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளும், திருவள்ளூர் மற்றும் ஆந்திர பிரதேசம் மற்றும் கடலோர பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழையானது பெய்து வருகிறது. இந்த மழையால் சென்னையின் தாழ்வான பகுதிகளிலும், சில சுரங்க பாதையிலும் மழைநீரானது சூழ்ந்துள்ளது.
மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் நீரை விரைந்து அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் செம்பரம்பாக்கம், புழல் ஆகிய நீர்த்தேக்கங்கள் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மாதாவரம், மணலி, அம்பத்தூர், தொழிற்பேட்டை, கொரட்டூர் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் சூழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புயல் எதிரோலி: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு