இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் வரலாறு, சிலைகளின் தொன்மை, அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் பல கோயில்களில் இது தொடர்பான பதிவேடுகள் காணாமல் போனது.
இதையடுத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, கோயில் சொத்துகள் குறித்த விவரங்களை அறநிலையத் துறை அலுவலர்கள் சேகரித்து வருகின்றனர். இதில் பல கோயில்களின் சொத்துகள், சிலைகள் மாயமானது தெரிய வந்துள்ளதாகக் கூறி, கோயில் சொத்து ஆவணங்கள், சிலைகள் மாயமானது குறித்து சிபிசிஐடி, தொல்லியல் துறை அடங்கிய கூட்டு புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயிலில் இருந்து கடத்தப்படும் சிலைகள் வெளிநாடுகளில் உள்ளது. இது சம்பந்தமாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் உடந்தையுடன் சிலைகள் குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது என மனுதாரர் கோரினார்.
இதையடுத்து, எந்தெந்த கோயில்களில் உள்ள சிலைகள் மாயமாகியுள்ளன என்பதை கண்டறிந்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:இயேசு அழைக்கிறார் டிரஸ்டிற்கு வந்த வெளிநாட்டு முதலீடுகள்!