சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத்துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை நிரூபிக்கவில்லை என தெரிவித்து, செப்.20ஆம் தேதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (அக்.16) விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அமைச்சர் கைது செய்யப்பட்டபோது, உரிய விதிமுறை பின்பற்றப்படவில்லை என நீதிமன்றம் கருதினால் ஜாமீன் வழங்கலாம். கைது செய்யப்படுவதற்கு முன் அமைச்சரிடமோ? அவரது உறவினரிடமோ? உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. நெஞ்சு வலிக்கு நீண்டகாலமாக மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும்.
அமைச்சர் அதிகாரத்தில் உள்ளவர் என்பதால் ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் 13 மருத்துவர்கள் கொண்ட குழு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அக்.9 ஆம் தேதி சிகிச்சை அளித்தது. மருத்துவ அறிக்கையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மருத்துவ சிகிச்சையில் இருப்பவர் அவருக்கான உரிமைகளைப் பெற சட்டம் அனுமதி வழங்குகிறது. 15 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாத அளவுக்கு அமைச்சர் பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும்' என்று வாதிட்டார்.
இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது. சட்டவிரோதமாக செந்தில் பாலாஜி கைது செய்யப்படவில்லை. கைதுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜி அதைப்பெற மறுத்துவிட்டார்.
சிஆர்பிசி 43A பிரிவின் படி, 16 வயதுக்கு குறைந்த பெண் குழந்தைகள் மற்றும் மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஜாமீன் வழங்க முடியும். செந்தில் பாலாஜிக்கு அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் சிறையில் வழங்கப்பட்டு வருகிறது. அக்.15 வரை செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எம்.ஆர்.ஐ, சிடி ஸ்கேன், ஈ.என்.டி, இதய மருத்துவர்கள் என 7-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.
சுமார் ரூ.67.74 கோடிக்கு பண பரிமாற்றம்; ஆதாரத்துடன் அமலாக்கத்துறை: சிறையில் மற்றும் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ சிகிச்சை வழங்க முடியாத நிலையில், ஜாமீன் வழங்கலாம். போக்குவரத்து துறையில் உள்ள 216 வேலைகளுக்கு சுமார் ரூ.67.74 கோடி பண பரிமாற்றம் நடந்தற்கான பென்டிரைவ் ஆதாரம் அமலாக்கத்துறைக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார். இதையடுத்து, அதிகாரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வெளிவந்து சாட்சிகளை அச்சுறுத்த மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம் அளிக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி 7 மணி நேர மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!