சென்னை: கோவை மத்திய சிறை எஸ்.பி.-யால் கைதியின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், புழல் சிறைக்கு மாற்றக் கோரிய மனு குறித்து, தமிழக அரசு மற்றும் சிறை நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது கோவை மத்திய சிறையில் இருக்கும் காளிமுத்துவின் மனைவி திவ்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "மதுரையில் நடைபெற்ற குற்றச் சம்பவம் தொடர்பாக கடந்த 2020-ஆம் ஆண்டு திருச்சியைச் சேர்ந்த காளிமுத்து என்கின்ற வெள்ளக் காளை கைது செய்யப்பட்டு கோவையிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, சக கைதிகளால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார்.
திருச்சி சிறை எஸ்.பி. செந்தில்குமாருக்கும், காளிமுத்துக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து காளிமுத்து மீது எஸ்.பி. புகார் ஒன்றை அளித்தார். எ.ஸ்பி கொடுத்தப் புகாரின் அடிப்படையில், காளிமுத்து மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பூந்தமல்லியில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, போதை பொருள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்ட காளிமுத்து கோவை சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது கோவை சிறையில் கண்காணிப்பாளராக செந்தில்குமார் இருந்து வருகிறார். எனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் அவரை புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (அக்.27) நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் திவ்யா தரப்பில் வழக்கறிஞர் எஸ். நதியா ஆஜராகி, "திருச்சி சிறையில் இருந்தபோது சிறை கண்கானிப்பாளர் செந்தில்குமாருக்கும், காளிமுத்துவுக்கும் முன்னதாகவே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், அவரது(திவ்யா) கணவரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் கோவை சிறை நிர்வாகம் ஆகியவை ஒரு வாரத்திற்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: ஜாமீன் பெற்றும் பலனில்லை.. வேறொரு வழக்கில் கைது.. பாஜகவின் அமர் பிரசாத்திற்கு தொடர் சிக்கல்!