சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி அருகே உள்ள ஆதனவூர் கிராமத்தில் குமரேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "நான் வாங்கிய 2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வாங்கி அனுபவித்து வரும் நிலையில், மூன்றாம் நபர்கள் சிலர் அந்த சொத்தில் அத்துமீறி நுழைந்து பயிருக்கு சேதம் விளைவித்தும், வேலியை சேதப்படுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்தேன்.
காவல்துறையினர் அந்தப் புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த மூன்றாவது நபரான கோவிந்தராஜ் திருப்பத்தூர் தாசில்தாரை அணுகி, குமரேசனின் தனிப் பட்டாவில் தங்கள் பெயரை சேர்க்க வேண்டும் என விண்ணப்பம் அளித்து, பெருந்தொகையை லஞ்சமாக கொடுத்து, தனிப்பட்டாவை கூட்டுப் பட்டாவாக மாற்றிவிட்டனர்.
இந்த நிலையில் தாசில்தார் விசாரணையின் போது, பட்டா பிரச்சினையை தீர்த்து வைப்பதாகக் கூறி, 20 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்த புகார், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் இதனை விசாரணைக்கு எடுத்து உரிய நடவட்க்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று (நவ.25) விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார் குறித்து மனுதாரருக்கும், தாசில்தாருக்கும் நோட்டீஸ் கொடுத்து, விளக்கம் கேட்டு 12 வாரங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று நீதிபதி மாவட்ட ஆசியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கு: 15 ஆண்டுகளுக்கு பின் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!