சென்னை: திருவண்ணாமலையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும், சமூக செயற்பாட்டாளருமான ராஜ்மோகன் சந்திரா 2012ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி காலை 6 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.
இது தொடர்பாக அவரது மனைவி ஆலயம்மா ஜோசப் அளித்த புகாரின்பேரில் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வெங்கடேசன், செல்வம், வீராசாமி, மீனாட்சி உள்ளிட்ட சிலருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 2012 ஆகஸ்ட் 28ஆம் தேதி இறுதி அறிக்கை தாக்கல்செய்யப்பட்டு, திருவண்ணாமலை அமர்வு நீதிமன்றத்திற்கு 2014ஆம் ஆண்டு பிப்ரவரில் வழக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் ஆலயம்மா ஜோசப் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கணவர் அம்பலப்படுத்திய சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க வேண்டும், கணவரின் மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும், தனது கணவர் ராஜ்மோகன் சந்திரா, காவல் துறை, வருவாய்த் துறை, வழக்கறிஞர்கள், நீதித் துறை நடுவர் ஆகியோரின் சட்டவிரோதச் செயல்பாடுகளையும், கட்டப்பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பு, மணல் திருட்டு தொடர்பாகவும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு இன்று (டிசம்பர் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறைத் தரப்பில் ராஜ்மோகன் சந்திராவே ரியல் எஸ்டேட் தொடர்பான விவகாரங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும், காவல் துறை எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து செயல்பட்டதால், எதிரிகள் அதிகமான நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வழக்கின் விசாரணைக்குப் போதிய ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 10ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொதுமக்களின் நலனுக்காகப் போராடுபவர்களின் இதுபோன்ற கொலை வழக்குகளில் விரைவாக விசாரணை நடத்த வேண்டியது நீதிமன்றங்களின் கடமை என்றும், விசாரணையைத் தாமதிப்பது என்பது இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும்.
குறிப்பாக எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படாமல், குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்படாமல் இருப்பதற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
பிப்ரவரி மாதத்திற்குப் பதிலாக ஜனவரி முதல் வாரமே வழக்கை விசாரணைக்கு எடுத்து குற்றப்பத்திரிகை நகல்களைச் சம்பந்தபட்டவர்களுக்கு வழங்க வேண்டும். விரைவாக விசாரணையை நடத்தி ஆறு மாதத்தில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் எனத் திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: என்னது 1 கிலோ டீத்தூள் ஒரு லட்சம் ரூபாயா? தேநீர் பிரியர்கள் ஷாக்