சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சி. ஜெகதீசன் என்பவர் விபத்தில் சிக்கி, இழப்பீடு வழங்கக் கோரி வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தாக்கல் செய்வதற்காக மருத்துவ வாரியத்தின் ஊனச்சான்று பெறும் நடைமுறைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, நரம்பியல் பிரிவில் 30 நாள்கள் தங்க வைக்கப்பட்ட பின்னர், 40 விழுக்காடு நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சான்றளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஊனச்சான்று பெறுபவர்களுக்கான தனி வார்டு உருவாக்க கோரியும், சான்று வழங்குவதற்கு காலக்கெடுவை நிர்ணயிக்கக்கோரியும் கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.
தனி வார்டு அமைக்கக் கோரி வழக்கு
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் ஆஜராகி, விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட குறைபாட்டை நிர்ணயிக்கும் ஊனச்சான்று கோருபவர்களை தங்கவைக்க தனி வார்டு இல்லாததால் தரையில் அமர்த்தப்படுவதாகவும், இதனால் மனுதாரர் வருமானம் இழந்து குடும்பத்தினர் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.கோவிந்தசாமி, மனுதாரரின் கோரிக்கை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அரசு பதிலளிக்க உத்தரவு
இருதரப்பு வாதத்திற்கு பிறகு நீதிபதி, மனுதாரர் தான் பாதிக்கப்பட்டதோடு நிற்காமல், தன்னைப் போன்ற வேறு யாரும் பாதிக்கக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு சிறந்த மருத்துவமனையாக செயல்படக்கூடிய ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஊனச்சான்று வாங்க வருபவர்களுக்காக தனி வார்டை அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் தனி வார்டு அமைப்பது குறித்து 4 வாரத்தில் முடிவெடுத்து வரும் ஜனவரி 7ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கிய நாய்க்குட்டி: பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை!