சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1,046 மதிப்பெண்கள் பெற்றிருந்த சென்னையைச் சேர்ந்த மாணவி நித்யா கடந்த 2016 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வின் மூலம் உறுப்பு கல்லூரியான ஜேப்பியார் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் (ECE) பிரிவில் சேர்த்துள்ளார். 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான 8 செமஸ்டர்களை கொண்ட கல்வியாண்டில், நான்கு செமஸ்டர்கள் வரை கல்லூரிக்கு சென்று வந்தார்.
உடல்நலக்குறைவின் காரணமாக அவர் 2018 ஆம் ஆண்டு முதல் கல்லூரிக்கு செல்லவில்லை. அதன் காரணமாக கல்லூரி நிர்வாகம் அவருக்கு மாற்றுச் சான்றிதழை வழங்கியதோடு அவரின் இடைநிற்றலை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. உடல்நிலை சீரான சம்மந்தப்பட்ட மாணவி கடந்த ஜூலை மாதம் மீண்டும் ஜேப்பியார் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.
கல்லூரி நிர்வாகம் விண்ணப்பம்
2022 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 5 ஆவது செமஸ்டருக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தியுள்ளார். மாணவியின் மறுசேர்கைக்கு அனுமதி வழங்குமாறு கல்லூரி நிர்வாகம் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்துக்கு விண்ணப்பித்தது.
அதனை பரீசிலித்த அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர், மாணவியின் மறுசேர்க்கைக்கான விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார்.
மறுசேர்க்கைக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்ய கோரியும், ஐந்தாவது செமஸ்டர் தேர்வெழுத அனுமதிக்க கோரியும் மாணவி தொடர்ந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (டிசம்பர் 22) விசாரணைக்கு வந்தது.
மறுசேர்க்கைக்கு அனுமதி
அப்போது மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படிப்பை தொடர முடியாமல் இடைநின்ற மாணவர்கள் மீண்டும் சேர்வதற்கு 2008 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை வழிவகை செய்வதாகவும், அண்ணா பல்கலைகழகத்தின் முடிவு அரசாணைக்கு எதிராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், மாணவியின் மறுசேர்க்கை தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் தான் முடிவெடுக்க வேண்டுமென தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மறுசேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டுமெனவும், ஐந்தாவது செமஸ்டர் தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: கேரள மூத்த காங்கிரஸ் தலைவர் பி டி தாமஸ் காலமானார்