சென்னை: புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் 2016இல் ரூ.112 கோடி செலவில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இவை தரமற்றவையாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்ததால், ஐஐடி குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அதில், தரமற்ற வகையில் குடியிருப்பை கட்டிய பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்க்கவும், அந்த நிறுவனத்திற்கு இனி அரசு ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், பிஎஸ்டி நிறுவனத்துக்கு எதிராக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நோட்டீஸ் அனுப்பியது. அதில், ஏன் தடை பட்டியலில் சேர்க்கக் கூடாது என விளக்கம் அளிக்க அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நோட்டீசை எதிர்த்து பிஎஸ்டி நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குடியிருப்புக்களை சரி செய்து தருவதாகவும், 93 விழுக்காடு பணிகள் முடிந்து விட்டதாகவும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்த்து பணிகள் மேற்கொள்ள தடை விதித்தால் அது சீரமைப்புப் பணிகளை ஸ்தம்பிக்கச் செய்து விடும் எனக் கூறி, அந்நிறுவனத்திற்கு எதிரான நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: தை 1 தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு வெளியாகுமா?