சென்னை: ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடுப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (நவ.24) மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்தனர். நீலகிரியில் 15 இடங்களில் பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக நடப்பாண்டில் இதுவரை ரூ.23 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பசுமை நிதியில் இருந்து பிளாஸ்டிக் சேகரிப்புக்கு நிரந்தர கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்தார்.
அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் பொது போக்குவரத்து வாகனங்கள் நிறுத்துவதில்லை என மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து அரசு பேருந்துகளும் சோதனைச் சாவடிகளில் நிறுத்தும்படி மாவட்ட போக்குவரத்து அதிகாரியான ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், சோதனைச் சாவடிகளில் பேருந்துகளை நிறுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
மேலும், பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க நிரந்தர கட்டமைப்பை ஓடந்துறையில் அமைக்கும் திட்டத்தை இறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிச.22ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதேபோல, வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் கேரளா மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் சார்பில் அதிகாரியை நியமிப்பது குறித்து விளக்கமளிக்க இருமாநில அரசுகளுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், இது சம்பந்தமான வழக்கின் விசாரணையை டிச.22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் விளக்கம் கேட்கும் ஆளுநர் - தள்ளிப்போடும் முயற்சியா?