சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் 2023ம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் நடந்தபோது கட்சியில் ஒற்றை தலைமை கொண்டுவர தீர்மானம் இயற்றப்பட்டது. அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றதையடுத்து, அவர்களை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர். அதனால் இரு தரப்பினருக்கு இடையே கலவரம் உண்டான நிலையில், அதிமுக அலுவலகம் மூடப்பட்டது.
மூடப்பட்ட அலுவலக கதவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உடைத்து உள்ளே நுழைந்தனர். அதன் பின்னர், அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருள்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச் சென்று விட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது.
இந்தப் புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இந்த புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக மாநிலங்களை உறுப்பினர் சி.வி சண்முகம் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் செயல்படுகின்றனர்.
ஆவணங்களை திருடிய சம்பவத்தை சிவில் பிரச்சினையாக கொண்டு வருகின்றனர். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் தான் சரியாக இருக்கும் என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இதற்கிடையே இந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (டிச.15) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்து மீரான், "இந்தச் சம்பவம் குறித்த வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 40 பேர் முன்ஜாமின் வாங்கி உள்ளனர். 116 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்று சுட்டிக்காட்டினர்.
விசாரணைகள் முறையான கோணத்தில் நடைபெற்று வருகிறது. வழக்குகள் குறித்த விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கை நான்கு வாரத்துக்கு ஒத்திவைத்து, அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தேவைக்கு அதிகமாகவே அதன் நேரத்தை வீணடித்து இருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, காவல்துறை அதன் பணியை விரைவாக செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழா: பார்வையிட்ட அமைச்சர் முத்துசாமி!