சென்னை: கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம், 'கே.எஸ்.ஆர்.டி.சி' என்ற சுருக்கத்தை கடந்த 1973 நவம்பர் 1ம் தேதி முதல் பயன்படுத்தி வருகிறது. இதற்கு, அதிகாரபூர்வமாக 2013ம் ஆண்டு இந்திய வர்த்தக முத்திரை பதிவு ஒப்புதலும் அளித்திருந்தது.
இதை எதிர்த்து கேரள மாநிலத்தின் கேரளா சாலை போக்குவரத்து கழகம்(KSRTC), சென்னையில் உள்ள ஐ.பி.ஏ.பி என்ற அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தில் முறையிட்டது. வழக்கு விசாரணையின் போது, கர்நாடகத்தின் கே.எஸ்.ஆர்.டி.சி சார்பில் 42 ஆண்டுகளாக கர்நாடகா அரசு இதை பயன்படுத்தி வருவது கேரள சாலை போக்குவரத்து கழகத்துக்கு தெரியும் என்றும், எனவே, வர்த்தக முத்திரையின் பதிவு தவறு என அறிவிக்க அவர்களுக்கு உரிமை இல்லை என வாதிடப்பட்டது.
கேரளா சாலை போக்குவரத்து கழகம் தனது வாதத்தில், கடந்த 2019ல் இதே பெயரில் பதிவு செய்ததாகவும், ஐ.பி.ஏ.பி.யின் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தில் தெரிவித்தது. இந்த நிலையில் மத்திய அரசு ஐ.பி.ஏ.பியை கலைத்த பின், இவ்வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இம்மனு மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நடைபெற்றது. கர்நாடகா மாநில சாலை போக்குவரத்து கழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி.எஸ்.கிரிதர் ஆஜராகி, முத்திரை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,1973லிருந்து பயன்படுத்தி வருவதற்கான ஆவணங்கள் உள்ளதாகவும், எனவே கேரளா சாலை போக்குவரத்து கழகம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, கேரள சாலை போக்குவரத்து கழகம் தாக்கல் செய்திருந்த குறியீட்டு உரிமை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக 10 நாட்களில் 86ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: மாநகராட்சி தகவல்...!