கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்தாண்டு மார்ச் முதல் நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கரோனா வைரஸ் தொற்றால், கடந்தாண்டு டிசம்பர் 27ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 622 பேர் உயிரிழந்தனர். தற்போது வரை தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உருமாற்றம் பெற்ற கரோனா வைரஸ் பிரிட்டனில் பரவத் தொடங்கியுள்ளது.
மிக வேகமாகவும், எளிதாகவும் பரவும் இந்த வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில், பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் இந்தியாவில் நுழைய மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில், மார்ச் மாதம் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மட்டும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், பிற நாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமும் கரோனா பரவியதால், பிரிட்டன் மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்கக் கோரி, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
இம்மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் பொது ஊரடங்கை அறிவித்தால் மிக மோசமான நிலை ஏற்படும் என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது உருமாற்றம் பெற்ற கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உருமாற்றம் பெற்ற கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, வெளிநாட்டு பயணிகளைத் தனிமைப்படுத்துவது குறித்து நிபுணர் குழு ஆலோசனைகளைப் பெற்று, அதன் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, ஜனவரி 18ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இம்மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.