சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தாலுகா, திருநீர்மலை நகர பஞ்சாயத்தில் விதிகளை மீறி செயல்படும் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்து, குவாரியை மூட உத்தரவிடக்கோரி உதயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை.10) விசாரணைக்கு வந்தது.
அப்போது, விதிமீறி செயல்படும் குவாரியை மூடக்கோரி பல முறை அலுவலர்களுக்கு மனு அனுப்பியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், உரிம விதிகளுக்கு உட்பட்டு குவாரிகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.