ஊரடங்கு உத்தரவு அறிவிப்புக்கு ஏற்ப, சென்னை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு அதிகரித்ததும், மெட்ரோ ரயில் சேவைகள் குறைக்கப்படுவதும், பின்னர் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறைந்ததும், மீண்டும் பயணிகள் சேவை உயர்த்தப்படுவதும் தொடர்ந்து வருகிறது.
தற்போது கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தமிழ்நாடு அரசு நாளை (மே 10) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, இன்று (மே.9) அத்தியாவசிய சேவைகளும், அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, ஞாயிறு அன்று செயல்படுத்தப்படும் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.
இதனால் (மே.9) சென்னை மெட்ரோ ரயில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, விடுமுறை தின அட்டவணையின்படி இயக்கப்படும் என, சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் விம்கோ நகர் மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரையிலான நீலவழித்தடத்தில் 1 மணி நேர இடைவெளியுடன் ரயில்கள் இயக்கப்படுகின்றன. எம் ஜி.ஆர்.சென்ட்ரல் மெட்ரோ முதல் விமான நிலையம் வரை செல்லும் பச்சை வழித்தடத்தில் 2 மணி நேர இடைவெளியுடனும், எம்.ஜி.ஆர் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை (அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் கோயம்பேடு மெட்ரோ வழியாக) - 2 மணி நேர இடைவெளியுடனும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: திருநங்கைகளுக்கும் இலவச பயணம்...ட்வீட்டுக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின்