சென்னை: கரோனா வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் மே 10ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.
தற்போது, புதிய ஊரடங்குத் தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் தொடங்கவுள்ளன.
புதிய ஊரடங்குத் தளர்வுகளின் அடிப்படையில், காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயிலில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் வரையும், பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரையும் திங்கட்கிழமை முதல் உச்ச நேரங்களில் 9 மணி முதல் 11 மணிவரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஐந்து நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
கண்காணிப்புப் பணியில் ஊழியர்கள்
பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்கள் அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.
மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகளின் வருகை, வெளியேறுதல், தனிமனித இடைவெளியைக் கண்காணிப்பதற்காக தேவையான ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடைமேடையில் காத்திருக்கும்போதும் ரயிலில் பயணிக்கும்போதும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருப்பதுடன் 6 அடி தூர இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பு: பொது போக்குவரத்து, படப்பிடிப்பிற்கு அனுமதி