சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து கூறியிருந்ததாவது:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது நாளை குமரி கடற்பகுதியில் நகர்ந்து வலுப்பெறக்கூடும்.
மேலும் 30, 31ஆம் தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லம், குமரி மாவட்டம் கொட்டாரத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்துவரும் இரு தினங்களைப் பொறுத்தவரையில் தென் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும் வடதமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழையைப் பொறுத்தவரையில் அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களிலும் வடதமிழ்நாட்டின் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் தென் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, மாலத்தீவு, லட்சத்தீவு, தெற்கு கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு 29, 30, 3ஆம் தேதிகளிலும் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த இரு தினங்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருச்சி மணப்பாறையைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். அந்த வகையில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : வடகிழக்குப் பருவ மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி