சென்னையில் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளில், பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு பால் முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னையில் விநியோகிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகளில் இன்று (ஏப்.20), நாளை (ஏப்.21) என இருவிதமான தேதிகள் அச்சிடப்பட்டிருந்தன.
இன்றைய தினம் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட பால் காய்ச்சும் போதே கெட்டுப்போனதால் பொதுமக்கள் முகவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முகவர்களும் வேறு வழியின்றி விநியோகிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகளுக்கு பதிலாக, வேறு பால் பாக்கெட்டுகளை மாற்றிக் கொடுத்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி பேசுகையில், “ஏற்கனவே ஆவின் பால் பாக்கெட்டுகளில் பல்வேறு குளறுபடிகள், முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. ஆவின் நிர்வாகம் ஊழலின் பிறப்பிடமாக திகழ்ந்து வந்தாலும்கூட அரசு நிறுவனம் என்பதால் ஆவின் நிர்வாகத்தின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஆவின் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசு முறையாக கண்காணிக்காவில்லை.
ஆவின் பால் பண்ணைகளில் பணியாற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் பொதுமக்களும், பால் முகவர்களும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இரு விதமான தேதிகள் அச்சிடப்பட்டு பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டது எப்படி? அதில் அடைக்கப்பட்டிருந்த பாலை காய்ச்சும்போதே கெட்டுப் போனது எப்படி? இது குறித்து உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட பால் முகவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : 'வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது' - கமல்