சென்னை: தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர், நடிகை மீரா மிதுன்.
இவர் தனது சமூக வலைதளத்தில் சமீபகாலமாக சர்ச்சைக்குரிய பதிவுகளைப் பதிவிட்டு வந்தார். அந்தவகையில் பட்டியலின மக்களை இழிவாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துப் புகார் கொடுத்தனர்.
சவால் விட்ட மீரா
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கொடுத்தப் புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மீரா மிதுன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையறிந்து தன்னை யாராலும் கைது செய்ய முடியாது என காவல் துறையினருக்கு சவால்விடுக்கும் வகையில் பேசினார்.
கைதின்போதும் வீடியோ!
கேரள தனியார் ஹோட்டலில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை நேற்று(ஆக.14) மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். அப்போதும் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலாக்கினார்.
இதையடுத்து இன்று (ஆக.15) அவரை சென்னை அழைத்து வந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து சைதாப்பேட்டையில் உள்ள மாஜிஸ்திரேட் குடியிருப்பில் உள்ள நீதிபதி முன்னிலையில் மீரா மிதுன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவ்வழக்கை 17ஆவது அமர்வு நீதிபதி கிருஷ்ணன் விசாரித்து, வரும் ஆக.27ஆம் தேதி வரை 13 நாட்கள் மீரா மிதுனை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வழக்கறிஞர் வந்தால்தான் பேசுவேன்’ - வாக்குவாதத்தில் மீரா