தமிழ்நாட்டில் மருத்துவக்கழிவுகளை சுத்திகரிக்க போதிய பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லை. இதனால் கரோனா பேரிடர் காலத்தில் மருத்துவக்கழிவுகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவக்கழிவுகளைச் சுத்திகரிக்க பதினொன்று பொது சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. சராசரியாக தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 47 டன் மருத்துவக்கழிவுகள் உற்பத்தியாவதாகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தகவல் தெரிந்துகொள்ள முடிகிறது.
அதில் வெறும் 34 டன் கழிவுகள் சுத்திகரிப்புக்கு உள்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள 13 டன் சுத்திகரிக்கப்படாமல் மற்ற மாநகராட்சி திடக்கழிவுகளுடன் கலப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைச் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மேற்கோள்காட்டி விமர்சிக்கின்றனர்.
மருத்துவக்கழிவுகளை அப்புறப்படுத்துவதில் சிறப்புக் கவனம் தேவை என்பதால் மருத்துவக்கழிவுகளைத் தனியாக அப்புறப்படுத்த வேண்டும் என மருத்துவக்கழிவுகள் மேலாண்மை விதிகள் கூறுகின்றன.
கரோனா போன்ற பேரிடர் காலத்தில் பெருந்தொற்று மருத்துவக்கழிவுகள் மூலம் அதிகமாகப் பரவ வாய்ப்புள்ளது. ஆகவே, கரோனா பெருந்தொற்று தொடர்புடைய மருத்துவக்கழிவுகளை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரைகள் வழங்கியுள்ளது.
அவ்விதிமுறைகள், மருத்துவக்கழிவுகள் மற்ற மாநகராட்சி திடக்கழிவுகளுடன் சேராமல் இருக்க ஐந்து வெவ்வேறு நிற சேகரிப்பு பைகளைக்கொண்டு பிரித்தெடுக்கவும், கூடுதலாக கழிவைக் கையாளும்போது கசிவு ஏற்படுவதைத் தடுக்க அக்கழிவுகளை இரண்டடுக்கு பாதுகாப்புள்ள பைகளில் எடுத்துச்செல்ல வலியுறுத்துகிறது.
கரோனா வார்டுகளிலிருந்து வரும் மருத்துவக்கழிவுகளை எளிதில் அடையாளப்படுத்தும்விதமாகவும், அதை உடனடியாக அப்புறப்படுத்துவதற்காகவும் அக்கழிவுகள் 'கோவிட்-11 கழிவு' என்று அடையாளப்படுத்தப்பட வேண்டும். கரோனா கழிவு மற்ற மருத்துவக்கழிவுகளுடன் கலக்காமல் இருப்பதற்கு மருத்துவமனைகள் கரோனா கழிவுகளைத் தனியாக ஒரு அறையில் சேகரித்துவைக்க வேண்டும், அல்லது வார்டில் இருந்தபடியே நேரடியாகச் சம்பந்தப்பட்ட ’Treatment Facility’ க்கு அனுப்பிவைக்க வேண்டும்.
மருத்துவமனையில் / சுகாதார மையத்திலிருந்து வெளியேறும் கரோனா கழிவுகள் தனியாகப் பதிவுசெய்யப்பட வேண்டும். அதேபோன்று ஒரு விழுக்காடு சோடியம் ஹைபோகுளோரைட் (Sodium Hypochlorite) கொண்டு கழிவுகளை அகற்றப் பயன்படும் பைகள், தொட்டிகள், தள்ளுவண்டிகள், வாகனங்கள் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம்செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளைத் தமிழ்நாடு அரசும், கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள சென்னை மருத்துவமனைகளும் சரியாகப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரோனா வார்டுகள் உள்ள மருத்துவமனை, தனிமைப்படுத்தப்படும் காப்பகங்கள், தனிமைப்படுத்தப்படும் வீடுகள் போன்றவைகளிலிருந்து எடுக்கப்படும் கழிவுகள் மற்ற கழிவுகளுடன் கலப்பதாகச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன், ”தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 34 டன் மருத்துவக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. அவற்றைக் கையாள 11 மருத்துவக் கழிவு மேலாண்மை மட்டுமே உள்ளன.
சென்னையில் உற்பத்தியாகும் மருத்துவக்கழிவுகளில் வெறும் 25 விழுக்காட்டை மட்டுமே பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த கட்டமைப்புகள் உள்ளன. மீதமுள்ள மருத்துவக்கழிவுகள் முறையாகக் கையாளப்படாமல், எந்தவிதமான பாதுகாப்புமில்லாமல் குழிதோண்டி புதைக்கப்படுவதும், மாநகராட்சி திடக்கழிவுகளுடன் கலப்பதும் இயல்பாக நடைபெறுகின்றது.
ஏற்கனவே மருத்துவக்கழிவு மேலாண்மை தமிழ்நாட்டில் கேள்விக்குள்ளாகிவிட்டது. இந்நிலையில் கரோனாவால் தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் மருத்துவக்கழிவுகளை முறையாகக் கையாளாமல்விட்டால் பெருந்தொற்று பரவல் அதிகரிக்கும்.
இந்த இக்கட்டான சூழலில் போதிய பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாமல் இயங்குவது என்பது தமிழ்நாட்டின் சுகாதாரத்திற்கே ஆபத்தாகிவிடும். மருத்துவக்கழிவு மேலாண்மையை உடனடியாக மேம்படுத்த வேண்டிய அவசியமிருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க: வீட்டில் 24 மணி நேரத்திற்கு மேல் மருத்துவக் கழிவை வைக்கக்கூடாது