அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று நடைபெற்றது. முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்காமல் விட்டுச் சென்ற மூன்று மாணவிகள் தங்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் இடங்களை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதனடிப்படையில் ஈரோட்டைச் சேர்ந்த இலக்கியா, கடலூரைச் சேர்ந்த சௌமியா, கடலூரைச் சேர்ந்த தர்ஷினி ஆகிய 3 மாணவிகள் தங்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கான இடங்களை வழங்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவினை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை அலுவலர்களிடம் வழங்கினர்.
அதனடிப்படையில் மருத்துவப் படிப்பில் 3 மாணவிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எம்பிபிஎஸ் படிப்பில் காலியாக இருந்த 23 இடங்களில் கலந்தாய்வின்போது 20 இடங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டன.
மூன்று மாணவிகளுக்கான இடங்கள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு மாலை 6.30 மணிக்கு கல்லூரியில் சேர்வதற்கான ஆணை வழங்கப்பட்டது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான மறுஒதுக்கீடு மற்றும் புதிய இடங்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்கி நடைபெறும்.
இதையும் படிங்க: குறுக்கே வந்த கன்றுக்குட்டி... முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் அடுத்தடுத்து விபத்து!