கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் மருத்துவ படிப்பிற்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்றார். அங்கு மருத்துவம் படித்து வந்த அவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்து ஏற்பட்டு நினைவு திரும்பாத நிலையில் சுமார் ஒன்றரை வருடம் பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்க முடியாத பிரசாந்தின் பெற்றோர், தனது மகனை இந்தியாவுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வெளியே வாழும் தமிழ்நாட்டு நல ஆணையரக அலுவலர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து பிரசாந்தை விமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு கடந்த 1ஆம் தேதி அழைத்து வந்தனர்.
இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மாணவர் பிரசாந்திற்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய பிரசாந்தின் தந்தை சம்பத் பாண்டியன், ’எனது மகன் விபத்தில் காயமடைந்து கடந்த ஒன்றரை ஆண்டு காலம் பிலிப்பைன்ஸ் நாட்டில் சிகிச்சை பெற்றுவந்தார். இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கு தனது மகனை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.
அதனை ஏற்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்ததாக தெரிவித்தார். தங்கள் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சம்பத் கூறினார்.