இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள காணொலியில் தெரிவித்ததாவது, "தமிழ்நாட்டில் பயிற்சி மருத்துவர்களுக்கும் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ. 21,000, பட்ட மேற்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ. 37,000, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு 39,500, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ. 42,000 தற்பொழுது வழங்கப்படுகிறது.
இது மத்திய அரசு மருத்துவ கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பயிற்சி கால ஊதியத் தொகையில் பாதியாகும். பல மாநிலங்களை ஒப்பிடும் பொழுதும் தமிழ்நாட்டில் பயிற்சி கால ஊதியம் குறைவாகவே வழங்கப்படுகிறது. கரோனா காலத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் மருத்துவர்களின் பணியைப் பாராட்டி , பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சி கால ஊதியத்தை உயர்த்தி உள்ளது.
டெல்லி மௌலான ஆசாத் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ. 1,00,652, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ. 1,03,447, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ. 1,06,242 பயிற்சி கால ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆண்டு கல்விக் கட்டணமும் ரூ. 15,600 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா தடுப்பு நடவடிக்கையில் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பங்கு மகத்தானது என்பதால் கேரள மாநிலம் இந்த ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை ரத்து செய்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசும், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவர்கள், செவிலியர்களுக்குப் பாதுகாப்புக் கவச உடைகளை வழங்கிடுக - மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!