தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ பணிகள் தேர்வாணையம் மூலம் ஒப்பந்த முறையில், 2015ஆம் ஆண்டு முதல் 14 ஆயிரம் செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
இரண்டு வருடங்கள் ஒப்பந்த முறையில் செவிலியர்கள் பணி நிறைவு செய்தபின் காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்யப்படுவர் என நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற அடிப்படையில் தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், அந்த கோரிக்கையை தற்போது வரை அரசு நிறைவேற்றவில்லை.
இதுநாள் வரை இரண்டாயிரம் செவிலியர்கள் மட்டுமே படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவ பணிகள் தேர்வாணையம் மூலம் நான்காயிரம் செவிலியர்களை அரசு தற்காலிகமாக பணியமர்த்தி உள்ளது.
24 மணி நேரமும் பணியாற்றி வரும் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் இருப்பதால், அவர்களுக்கு மகப்பேறு விடுப்பும் அளிக்கப்படுவதில்லை. இந்த கரோனா நோய் தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையிலும், தங்களது உயிரை கூட பணயம் வைத்து பணி செய்தனர்.
அப்போது கரோனா வைரஸ் தொற்றால் செவிலியர்கள் பலர் பாதிக்கப்பட்டதுடன், உயிரிழந்தனர். இவர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் கடந்த 6ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டத்தில் நாளை ஈடுபடுகின்றனர். அதைத் தொடர்ந்து, ஜனவரி 28ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சுகாதாரப் பணியாளர்களுக்கு உரிய வசதிகள் செய்து தர உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!