சென்னை : தஞ்சாவூரைச் சேர்ந்த ஆபிரகாம், கர்ப்பிணியான தனது மகள் ஷீலா செல்வராணியை கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி, ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மயக்க மருந்து செலுத்திய மருத்துவர் குமரன் அறுவை சிகிச்சை முடியும் வரை காத்திருக்காமல் வெளியேறியுள்ளார்.
மயக்க மருந்து செலுத்திய பின்னர், கவனக்குறைவாக செயல்பட்டதால் ஷீலா செல்வராணி 2009ல் ஜனவரி 24ஆம் தேதி மரணமடைந்தார். மருத்துவர்களின் கவனக்குறைவால் தனது மகள் இறந்து விட்டதாகக் கூறி, நடவடிக்கை எடுக்கக் கோரி ஆபிரகாம் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ், நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் கடமை தவறியுள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தைக்கு 5 லட்சம் ரூபாயை எட்டு வாரங்களில் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். இத்தொகையை மயக்க மருந்து செலுத்திய மருத்துவர்கள் குமரன், முத்துகுமரன் ஆகியோரிடம் இருந்து தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வசூலிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : உண்ணாவிரதப்போராட்டத்தில் மயங்கி விழும் ஆசிரியர்கள்