சென்னை: லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னைக்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் இன்று காலை 10 மணிக்கு வந்தது.
அதில் வந்தப் பயணிகளுக்கு நடந்த குடியுரிமை சோதனையில் ஒரு பெண் பயணி லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்திருந்ததை கண்டுப்பிடித்தனர்.
இதையடுத்து குடியுரிமை அலுவலர்கள் விமானநிலைய சுகாதாரத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக விரைந்த மருத்துவக் குழுவினர் அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் மத்தியப் பிரதேசம் போபால் நகரை சோ்ந்த 21 வயது இளம் பெண் என்பது தெரியவந்தது. அவர் லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்து, இங்கிருந்து உள்நாட்டு விமானத்தில் போபால் செல்லவிருந்ததும் தெரியவந்தது.
ஆனால் சுகாதாரத்துறையினர் அந்தப் பெண்ணின் போபால் பயணத்தை ரத்து செய்து, அவருக்கு கரோனா மருத்துவ பரிசோதனை (RTPCR) நடத்தினர்.
அதன்பின்பு பரிசோதனை முழு முடிவு வரும்வரை அந்த பெண் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினர்.
தொடர்ந்து, அப்பெண் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு தனிமைப்படுத்த அனுமதிக்கப்பட்டார்.
ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய கரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பின்பு சென்னை விமான நிலையத்தில் இதுவரை லண்டனிலிருந்து வந்த 29 பயணிகள், மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி துபாய் செல்ல முயன்றவர் கைது