தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்தது.
வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதிவரை நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், பல்வேறு துறைகளில் அறிவிக்கப்பட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
இந்நிலையில் இன்று (செப்.2) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு (நீட்) தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மாணவர்களுக்கான சமூக நீதி பாதுகாப்பு உறுதி
மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவனுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, கடந்த ஜூன் 5ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அந்த குழுவானது கடந்த ஜூலை 17ஆம் தேதி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து, அதனை செயல்படுத்தும் பொருட்டு தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
மேற்காணும் குழு மருத்துவக் கல்வி சேர்க்கையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வினை புரிந்துகொள்வதற்கு புதிய சட்டத்தை இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது. இது மருத்துவக்கல்வியில் செயற்கை முறைகளில் பாகுபாடு காட்டப்படுவதால் ஒதுக்கப்படும் மற்றும் பாதிக்கப்படும் மாணவ சமுதாயத்திற்கான சமூகநீதியை பாதுகாப்பை உறுதி செய்யும்.
இட ஒதுக்கீட்டுமுறையை பின்பற்ற வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒன்றிய அரசு அனைத்து இந்திய தொகுப்பு இடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இந்த நிதியாண்டு முதல் இளநிலை முதுநிலை பல் மருத்துவர் சேர்க்கைக்கு பின்பற்ற முடிவு செய்துள்ளது.
மாநில அரசால் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறையை, அகில இந்திய தொகுப்பில் மாநில அரசால் அளிக்கப்படும் இடங்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.
தென் சென்னையில் புதிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை
சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், ரூ. 250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதியுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
இந்த மருத்துவமனையில் 7 மருத்துவ உயர் சிறப்பு உரிமைகளும், 12 உயர் சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவுகளும் செயல்படும்.
இதற்கான விரிவான திட்ட மதிப்பீடு பொதுப்பணித்துறையால் தயார் செய்யப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
புகையில்லா பொது இடங்கள்
புகையில்லா கிராமங்கள், தூதரகங்கள், சென்னை, புறநகர் காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள், போக்குவரத்து நிறுவனங்கள், வாகனங்கள், தமிழ்நாடு அஞ்சலகங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கட்டடங்கள், உணவு விடுதிகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், குடிசைப் பகுதிகள், திரையரங்குகள், உயர்நீதிமன்றம் தலைமைச்செயலகம் ஆகியவை புகையில்லா பொது இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அவசர சிகிச்சை ஊர்தியின் வருகை நேரம் குறைப்பு
தேவைக்கேற்றவாறு அவசர விதிகளை முறையாக ஒதுக்கீடு செய்வதன் மூலமாக, அவசர சிகிச்சை ஊர்தி சென்றடையும் கால அளவு 15.04 நிமிடங்கள் என 2011ஆம் ஆண்டு இருந்தது.
இது 2020ஆம் ஆண்டில் 14.45 நிமிடங்கள் ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநிலத்தில் அவசர சிகிச்சை ஊர்தியின் நேர அளவு 11 நிமிடங்களில் இருந்து 7.32 நிமிடங்களாக குறைந்துள்ளது.
சாலை விபத்து இறப்பு விகிதம் குறைப்பு
TAEI மற்றும் இதர தொடர்புடைய அரசுத் துறைகளில் சீரிய முயற்சியின் காரணமாக சாலை விபத்து இழப்புகள் 3.8 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சாலை விபத்து தொடர்பான இறப்புகள் 12 ஆயிரத்து 216 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 10 ஆயிரத்து 575 ஆக குறைந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ் வழியில் பயின்றோருக்கு முன்னுரிமை வழங்க அரசாணை வெளியீடு