சென்னை: கொண்டித்தோப்பு பெத்தநாயக்கன் தெருவை சேர்ந்தவர் ரத்னா தேவி (58). கடந்த 17ஆம் தேதி மாலை வீட்டுக்கு அருகே உள்ள கோயிலுக்கு சென்று விட்டு, வீடு திரும்பும் போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவர் கழுத்தில் இருந்த 10 கிராம் தங்க செயினை பறித்து விட்டு மாயமானார். இந்த சம்பவம் தொடர்பாக ரத்னா தேவி ஏழுக்கிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்கள்
கடந்த 18ஆம் தேதி மாலை கொரட்டூரில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், இதேபோன்று செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பி சென்றார். இதுகுறித்து கொரட்டூர் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதே போல பூக்கடை பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் செயின் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சென்னை காவல்துறையினர் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டுள்ளது. மேற்கண்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட நபர் ஒருவர் தான் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் ஏழுகிணறு பகுதியில் உள்ள தங்கப் பட்டறையில் சந்தேகத்திற்குரிய இளைஞர் ஒருவர் தங்க நகையை உருக்க வந்திருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தங்கப் பட்டறைக்கு விரைந்தனர்.
பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பு
அங்கு சென்று அந்த இளைஞரை பார்த்த போது செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, அவர் மண்ணடியை சேர்ந்த முகமது ஃபைசல் (22) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ்நாட்டின் பிரபலமான பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்த இவர், கடந்த 2020ஆம் ஆண்டு பிடெக் படிப்பை முடித்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.
மேலும், கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆணழகன் போட்டிக்கு தயாரான இவர், அகில இந்திய இளையோர் ஆணழகன் போட்டியில் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அளவில் தங்கம் வென்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.
நண்பர்களால் கடனாளியான ஆணழகன்
காவல்துறையின் விசாரணையில் முகமது ஃபைசல் படிக்கும் காலத்தில் தன்னுடைய துபாய் நண்பர் ஒருவர் மூலமாக துபாயில் இருந்து ஐபோன்களை வாங்கி கல்லூரி நண்பர் ஒருவருக்கு விற்றுள்ளார். இதனையறிந்த கல்லூரி நண்பர்கள் பலர் முகமது ஃபைசலிடம் ஐபோன் வாங்கித் தருமாறு கேட்டதன் அடிப்படையில் நிறைய நண்பர்களுக்கு ஐபோன்கள் வாங்கி குறைவான விலைக்கு விற்று வந்துள்ளார்.
பல நண்பர்கள் பணம் தராமலும் குறைந்த பணம் கொடுத்ததாலும் முகமது ஃபைசல் பெரும் கடனாளியாக ஆகியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் முகமது ஃபைசலுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாத முகமது ஃபைசல் செயின் பறிப்பில் ஈடுபட்டு கடனை அடைக்க முடிவு செய்துள்ளார்.
திசைமாறிய வாழ்வு
இதனடிப்படையில் தன்னுடைய தாயாரின் இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளை கழற்றிவிட்டு, தன்னுடைய அடையாளத்தை மறைக்கும் விதமாக ஹெல்மெட் அணிந்து கொண்டு முதல்முறையாக ரத்னாதேவியிடம் 10 கிராம் தங்க நகையை பறித்து உள்ளார்.
முதல் நாள் ஏழுக்கிண்று பகுதியில் தனியாக சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட முகமது ஃபைசல் அதற்கு அடுத்த நாள் கொரட்டூரில் தனியாக சென்ற பெண்ணிடம் செயின் பறித்துள்ளார். பின்னர் பூக்கடைப் பகுதியில் செயின் பறிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
சிறை
செயின் பறிப்பில் ஈடுபட்ட பின் அந்த நகைகளை ஏழுக்கிண்று பகுதியில் உள்ள ஒரு தங்க நகை பட்டறையில் கொடுத்து உருக்கி விற்று வந்துள்ளார் என்பதும் தற்போது தான் முதல்முறையாக குற்றச் சம்வங்களில் ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. முகமது ஃபைசல் தந்தை துபாயில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் குடும்பத்தில் உள்ளவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவம் படித்தவர்கள் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: Video Leak: அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு லஞ்சம் பெற்ற ஊழியர்