சென்னை: 2022-23ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவப்படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி நர்சிங் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு அக்டோபர் 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வின் முடிவின் அடிப்படையில் அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு, மத்திய தொகுப்பு இடங்கள், மாநில தொகுப்பு இடங்கள், மத்திய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகம், நிகர்நிலைப்பல்கலைக்கழகம், எய்ம்ஸ், ஜிப்மர் பல்கலைக்கழகம் ஆகிய பிரிவுகளின் கீழ் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் 15 விழுக்காடு இடங்களும், மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள 100 விழுக்காடு இடங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள், எய்ம்ஸ், ஜிப்மர், நிகர் நிலைப்பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் மருத்துவக் கலந்தாய்வு குழு நடத்த உள்ளது.
அதேபோன்று, மாநில அரசு மருத்துவக்கல்லூரிக்கான 85 விழுக்காடு மாநில ஒதுக்கீட்டின்கீழ் சேர்க்கை அந்தந்த மாநில அரசுகளால் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
இதையும் படிங்க: சிஎன்என் ஊடகம் தனக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்கிறது - கடுப்பில் வழக்குத்தொடர்ந்த டிரம்ப்!