தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 7ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வினை எழுதிய 1,23,078 மாணவர்களில் 59,785 மாணவர்கள் தகுதிப்பெற்றுள்ளனர்.
இதுவரை 57,144 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 48,295 மாணவர்கள் சமர்பித்துள்ளனர். இந்தப் படிப்பில் சேர்வதற்கு வரும் 20ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். 21ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செயலாளர், மாணவர் சேர்க்கை, மருத்துவக்கல்வி இயக்கம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 2ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 4ஆம் தேதி சிறப்பு பிரிவினர் மற்றும் ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் போக்குவரத்து தொழிலாளர் குழந்தைகளுக்கான ஒதுக்கீட்டு இடம் ஆகியவற்றிக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜூலை 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,250 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 இடத்திற்கும், தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.